டி20 உலகக்கோப்பை 2026: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை
செய்தி முன்னோட்டம்
டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் நேருக்கு நேர் மோதின. இதில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
இந்தியா இன்னிங்ஸ்
இந்திய அணியின் பேட்டிங் அபாரம்
போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா (52 ரன்கள்) மற்றும் சஞ்சு சாம்சன் (89 ரன்கள்) குவித்தனர். அடுத்து இஷான் கிஷானும் அதிரடியாக ரன் குவித்து 54 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் சிவம் துபேவும் அதிரடியாக 26 ரன்கள் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து இன்னிங்ஸ்
நியூசிலாந்து இன்னிங்ஸ் சொதப்பல் பேட்டிங்
256 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டிம் சீஃபர்ட் 52 ரன்கள் சேர்த்தார். எனினும் மற்ற வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லோயர் ஆர்டரில் களமிறங்கிய மிட்செல் சான்ட்னர் (43 ரன்கள்) எடுத்து போராடினாலும், இலக்கை எட்ட அது உதவவில்லை. இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் சாதனைகள்
டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 50+ எடுத்ததன் மூலம், தொடர்ந்து அதிகபட்சமாக 50+ எடுத்த விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட உயரடுக்கு வீரர்களின் பட்டியலில் இணைந்தார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அரைசதம் எடுத்த விராட் கோலி மற்றும் ஷாஹித் அப்ரிடியின் பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்தார். ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த பின் ஆலன் (20) சாதனையை சஞ்சு சாம்சன் 24) முறியடித்தார். மேலும், இதன் மூலம் முழு உறுப்பினர் நாடுகளில் ஒரு டி20 தொடரில் அதிக சிக்சர் எடுத்தவர்களில் இரண்டாவதாக உள்ளார். இதற்கிடையே, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இந்திய அணி
இந்திய அணியின் சாதனைகள்
பவர்பிளே முடிவில் 92 ரன்கள் எடுத்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. ஒரு டி20 உலகக்கோப்பை இன்னிங்ஸில் 3 அரைசதங்களுடன், அதிக அரைசதங்கள் அடித்த முந்தைய சாதனைகளை சமன் செய்துள்ளது. 7.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதன் மூலம், ஒரு இன்னிங்சில் குறைந்த பந்துகளில் 100 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது. 10 ஓவர்கள் முடிவில் 127/1 ரன்கள் எடுத்ததன் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 10 ஓவர் முடிவில் இரண்டாவது அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனை படைத்தது.
ஜஸ்ப்ரீத் பும்ரா
ஜஸ்ப்ரீத் பும்ரா அபாரம்
இந்திய அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், டி20 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆனார். மேலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 40 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக மாறியுள்ளார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக ஆட்ட நாயகன் விருதும் வென்றார். இதற்கிடையே சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் தொடர் நாயகன் விருதும் வென்றார்.