டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை
சீனாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை ஆசியா பி தகுதிச் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ரஸ், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த சீனா இட்ரஸின் அபார பந்துவீச்சு மூலம் 11.2 ஓவர்களில் 23 ரன்களில் சுருண்டது. இதையடுத்து பேட்டிங் செய்த மலேசிய அணி 4.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இட்ரஸ் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் சிறந்த பந்துவீச்சாளர் தீபக் சாஹர்
இட்ரஸ் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு முன்பு, நைஜீரிய வீரர் பீட்டர் அஹோ 5 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்ததே சாதனையாக இருந்தது. அவர் 2021 இல் சியரா லியோனுக்கு எதிராக இந்த சாதனையை செய்திருந்தார். இதற்கிடையே, ஐசிசியின் முழு உறுப்பினர் நாடுகளில், இந்திய கிரிக்கெட் அணியின் தீபக் சாஹர் டி20 கிரிக்கெட்டில் சர்வதேச சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களை கொண்டுள்ளார். அவர் 2019 இல் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 12 பந்துவீச்சாளர்கள் இதற்கு முன்பு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால் இட்ரஸை தவிர வேறு யாரும் இதுவரை 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதில்லை.