ஐபிஎல்லில் 19வது அரைசதம், 2,900+ ரன்கள்! புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
மொஹாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 46வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி ஐபிஎல்லில் புதிய மைல்ஸ்டோனை எட்டியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இது ஐபிஎல்லில் சூர்யகுமார் யாதவின் 19வது அரைசதமாகும். மேலும் இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை அடித்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷானுடன் (75) பார்ட்னர்ஷிப்பில் 106 ரன்கள் சேர்த்தனர்.
ஐபிஎல்லில் 2,900 ரன்கள் மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் நடப்பு ஐபிஎல்லில் ஆரம்ப சில போட்டிகளில் சொதப்பினாலும், தற்போது முழுமையான ஃபார்மில் உள்ளார். கடைசியாக அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 55 ரன்கள் எடுத்த நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் அரைசதம் அடித்துள்ளார். முன்னதாக இந்த சீசனின் தொடக்கத்தில், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்களை நிறைவு செய்திருந்தார். மேலும் சூர்யகுமார் இப்போது 251 டி20 போட்டிகளில் 150.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 6,165 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்கள் மற்றும் நாற்பது அரைசதங்கள் அடங்கும்.