LOADING...
வீட்டில் ஒரு கோச் இருக்கிறார்; தன் வெற்றிக்கு மனைவியின் அட்வைஸ்தான் காரணம் என உருகிய சூர்யகுமார் யாதவ்
ராய்ப்பூர் போட்டியில் கம்பேக் ரகசியத்தை வெளியிட்ட சூர்யகுமார் யாதவ்

வீட்டில் ஒரு கோச் இருக்கிறார்; தன் வெற்றிக்கு மனைவியின் அட்வைஸ்தான் காரணம் என உருகிய சூர்யகுமார் யாதவ்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2026
02:30 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான ராய்ப்பூர் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுமார் 468 நாட்கள் மற்றும் 24 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு டி20 போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். இந்த வெற்றிக்குப் பின் பேசிய அவர், தனது இந்தத் திருப்புமுனைக்குத் தனது மனைவி தேவிஷா ஷெட்டி கொடுத்த ஆலோசனையே முக்கிய காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அட்வைஸ்

மனைவியின் அந்த ஒரு அட்வைஸ்

பிசிசிஐ பகிர்ந்த வீடியோவில் இஷான் கிஷனுடன் பேசிய சூர்யகுமார், தான் ஃபார்ம் அவுட்டில் இருந்தபோது வீட்டில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்: "பொதுவாக நாம் வீட்டிற்குச் சென்றால் அங்கும் ஒரு கோச் இருப்பார். என் மனைவி தேவிஷா என்னை மிக நெருக்கத்திலிருந்து கவனிப்பவர், அதனால் என் மனநிலை அவருக்குத் தெரியும். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டாமல், களத்தில் சற்று நேரத்தைச் செலவிடுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார். அந்த ஆலோசனையைப் பின்பற்றி நிதானமாக விளையாடத் தொடங்கியதே எனக்குப் பலன் அளித்தது. வலைப்பயிற்சியில் நன்றாக விளையாடினாலும், போட்டியில் ரன் எடுக்கும்போதுதான் அந்தத் தனி தன்னம்பிக்கை கிடைக்கிறது." என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

ராய்ப்பூர்

ராய்ப்பூரில் நிகழ்ந்த சாதனை

210 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. சஞ்சு சாம்சன் (6) மற்றும் அபிஷேக் சர்மா (0) சீக்கிரம் வெளியேறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் களம் புகுந்தார். ஆரம்பத்தில் 11 பந்துகளில் 11 ரன்கள் என நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், செட்டில் ஆன பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்தார். இஷான் கிஷனுடன் (76 ரன்கள்) இணைந்து 3வது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 122 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Advertisement

சமூக வலைதளம்

சமூக வலைதளங்களில் இருந்து விலகல்

தனது ஃபார்மை மீட்க 2-3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ், அந்தச் சமயத்தில் சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக விலகி இருந்ததாகக் கூறினார். இது அவருக்குப் புத்துணர்ச்சியையும், சரியான மனநிலையையும் கொடுத்துள்ளது. 2024 அக்டோபருக்குப் பிறகு அவர் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். வரும் ஜனவரி 25 அன்று குவஹாத்தியில் நடைபெறவுள்ள 3 வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இதே அதிரடியைத் தொடர அவர் ஆர்வமாக உள்ளார்.

Advertisement