'WTC 2023 இறுதிப்போட்டியில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது' : சுனில் கவாஸ்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் உலகின் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் பிளேயிங் 11 இல் சேர்க்கப்படாததற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் உமேஷ் யாதவை பிளேயிங் 11 இல் சேர்த்துள்ளதையும் கடுமையாக விமர்சித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின், பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியா இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது அபாரமாக செயல்பட்டார். இதனால் அஸ்வின் போன்ற மேட்ச் வின்னரை சேர்க்காமல் இந்தியா கூடுதல் வாய்ப்பை தவறவிட்டதாக சவுரவ் கங்குலியும் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், இந்த முடிவு இந்திய அணிக்கு பேரிழப்பாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் கூறியதன் முழு விபரம்
ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய சுனில் கவாஸ்கர், "அஸ்வின் விளையாடாததன் மூலம் இந்தியா ஒரு தந்திரத்தை தவறவிட்டது. அவர் தான் நம்பர் 1 பந்துவீச்சாளர். இவரைப் போன்ற வீரர்களுக்கு ஆடுகளத்தைப் பார்க்க வேண்டாம். நீங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறீர்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலரை நீங்கள் தேர்வு செய்யவில்லை. இந்திய அணியின் இந்த முடிவு எனது புரிதலுக்கு அப்பாற்பட்டது. இந்த ஆஸ்திரேலிய அணியில் நான்கு இடது கை பேட்டர்கள் உள்ளனர். அஸ்வின் எப்போதும் அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். இதனால் இந்திய அணியில் எந்த ஒரு ஆஃப் ஸ்பின்னரும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது." என்று கூறினார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.