ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர்
ஆறு ஆசிய நாடுகள் பங்குபெறும் 2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இலங்கையில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ. இந்தப் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயர்கள் இடம்பெறாத நிலையில், நீண்ட காலமாக ஃபார்மில் இல்லாத கே.எல்.ராகுலின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ரசிகர்கள் பலரும், வழக்கம் போல் குறிப்பிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டது குறித்தும், குறிப்பிட்ட வீரர்கள் இல்லாதது குறித்தும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், லைவ் நிகழ்ச்சி ஒன்றில், அஷ்வின் அணியில் சேர்க்கப்படாதது குறித்து ரசிகர் ஒருவரது கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்திருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.
சுனில் கவாஸ்கரின் பதில்:
ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சுனில் கவாஸ்கர், "இது போன்றை சர்ச்சைகளை ஏற்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். இது தான் தற்போதைய தொடருக்கான இந்திய அணி. உங்களுக்குப் பிடித்திருந்தால் போட்டிகளைக் காணுங்கள், இல்லையென்றால் பார்க்காதீர்கள். ஆனால், இந்த வீரரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இந்த வீரரைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது எனக் கூறுவதை முதலில் நிறுத்துங்கள். இது ஒரு தவறான மனநிலை" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், "உலகக் கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட வீரர் தேவை என்றால், அவர் அணியில் எடுக்கப்பட்டிருப்பார். இங்கு எந்த வீரருக்கும் தவறு நடக்கவில்லை." எனவும் கூறியிருக்கிறார். ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையின் வெற்றி குறித்து பேசும் போது, நிச்சயம் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.