டேவிஸ் கோப்பை 2023 : டென்மார்க்கிற்கு எதிராக இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி!
டென்மார்க்கிற்கு எதிரான டேவிஸ் கோப்பை உலக குரூப் ப்ளே-ஆஃப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி ஆட்டமிழந்ததை அடுத்து, 0-1 என பின்தங்கிய இந்தியாவை, இரண்டாவது ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் வெற்றி பெற்று, சமன் செய்தார். நாகல் 4-6, 6-3, 6-4 என செட் கணக்கில் இரண்டு மணி நேரம் 27 நிமிடங்களில் டென்மார்க்கின் ஹோம்கிரனை வீழ்த்தி முதல் நாள் முடிவில் அதை 1-1 என மாற்றினார். 506-வது இடத்தில் உள்ள 25 வயதான நாகல், போட்டியின் முதல் செட்டை இழந்தாலும், பின்னர் போராடி வெற்றி பெற்றார். முன்னதாக, உலகின் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ஹோல்கர் ரூனை எதிர்கொண்ட பாம்ப்ரி 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.
டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியில் ஆட மறுத்த இந்தியா : சுவாரஸ்ய பின்னணி
இதில் இந்தியா ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும், 1966, 1974, 1987 என மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 1973 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 1974இல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆனால், தென்னாப்பிரிக்காவின் நிறவெறி காரணமாக, அந்த அணியுடன் ஆட இந்தியா மறுத்துவிட்டது. அதில் ஆடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியிருக்க வாய்ப்புண்டு. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், 1974இல் இந்திய அணி வழிநடத்தியது ராமநாதன் கிருஷ்ணன். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ் (20 வயது) , ஆனந்த் அமிர்தராஜ் (22 வயது) சகோதரர்கள் முக்கிய வீரர்களாக இருந்தார்கள்.