100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி ஸ்டீவ் ஸ்மித் சாதனை
ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை (ஜூலை 6) ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளார். இதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகள் கிளப்பில் நுழைந்த 15வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 59.56 சராசரியை கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் 2010 இல் லெக் ஸ்பின்னராக தனது பயணத்தை தொடங்கினார். அப்போது, சிறப்பு சுழற்பந்து வீச்சாளரைத் தேடும் முயற்சியில் ஆஸ்திரேலியா இருந்தது. 2006 இல் ஜாம்பவான் ஷேன் வார்ன் ஓய்வு பெற்றதிலிருந்து இந்த தேடல் தொடர்ந்தது. இருப்பினும், ஸ்மித் தரவரிசையில் உயர்ந்து, வழக்கத்திற்கு மாறான மிடில்-ஆர்டர் பேட்டராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் புள்ளிவிபரம்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஸ்டீவ் ஸ்மித் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 59.56 சராசரியை கொண்டுள்ளார். இது இந்த கட்டத்தில் எந்தவொரு பேட்டருக்கும் அதிகபட்சமாகும். இதற்கு முன், இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் தனது 100வது டெஸ்டின்போது 58.16 சராசரியை எடுத்து சாதனை படைத்திருந்தார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள ஸ்மித், 9,113 ரன்களை குவித்துள்ளார். மேலும் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக நான்காவது அதிக ரன்கள் எடுத்துள்ள வீரராக உள்ளார். சர் டொனால்ட் பிராட்மேன் (99.94) மற்றும் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (60.73) ஆகியோருக்குப் பிறகு ஸ்மித்தின் சராசரி 59.56 என்பது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பேட்டர்களில் மூன்றாவது சிறந்ததாகும்.