ஆஷஸ் 2023 : ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் (ஜூன் 29) வியாழன் அன்று ஸ்டீவ் ஸ்மித் தனது 32வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். ஸ்மித்தின் சதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை எடுத்தது. முன்னதாக, தனது 99வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்மித், முதல் நாள் ஆட்டமிழக்காமல் 85 ரன்களை எடுத்த நிலையில், இரண்டாவது நாளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 சதங்களுடன் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவின் சாதனையை சமன் செய்தார். தற்போது ரிக்கி பாண்டிங் மட்டுமே ஸ்மித்தை விட அதிகம் எடுத்த ஆஸ்திரேலிய வீரராக உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த நான்காவது வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்த சதத்தின் மூலம், ஸ்டீவ் ஸ்மித் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக சதமடித்த நான்காவது வீரர் ஆனார். இதற்கு முன்பு இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா 43 சதங்களுடன் நான்காவது இடத்தில் இருந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 44 சதங்களை அடித்து முன்னிலை பெற்றுள்ளார். இந்த 44 சதங்களில் 32 டெஸ்ட் போட்டிகளிலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக சர்வதேச சதங்களை அடித்த வீரர்களில் விராட் கோலி 75 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜோ ரூட் 46 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், டேவிட் வார்னர் 45 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.