கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு: இலங்கை-நியூசிலாந்து இடையே ஆறு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இரண்டு போட்டிகளும் இலங்கையின் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். முதல் போட்டி செப்டம்பர் 18 அன்று தொடங்குகிறது.
இந்த தொடக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வழக்கமான ஐந்து நாட்கள் நடைமுறையில் இருந்து மாறி ஆறு நாட்கள் நடத்தப்பட உள்ளது.
எனினும், போட்டி ஐந்து நாட்கள் மட்டுமே நடக்கும், இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் இடையே செப்டம்பர் 21 அன்று ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் அதிசயம்
ஆறு நாள் டெஸ்ட்: நவீன கிரிக்கெட்டில் ஒரு அரிய நிகழ்வு
ஓய்வு நாள் உட்பட ஆறு நாள் டெஸ்ட் போட்டிகள், கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்தில் பொதுவான ஒன்றாக இருந்தது.
எனினும், இந்த நூற்றாண்டில் இத்தகைய கிரிக்கெட் போட்டிகள் மிகவும் அரிதாகவே இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, 2001இல் கொழும்பில் ஜிம்பாப்வேக்கு எதிராக இதேபோல் ஆறு நாட்கள் போட்டியில் பங்கேற்றது.
2008ஆம் ஆண்டு டாக்காவில் பங்களாதேஷ் இலங்கையுடன் விளையாடிய போது ஓய்வு நாள் கொண்டிருந்தது. இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு நாள் கொண்ட கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
இதற்கிடையே, 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.