இலங்கை இளம் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 26 வயதே ஆன இளம் வீரரான வனிந்து ஹசரங்க 2020 டிசம்பரில் செஞ்சூரியனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதன்பின்னர், இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் ஒரு அரைசதம் உட்பட 196 ரன்கள் எடுத்துள்ளதோடு, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 2021 இல் பல்லேகலேயில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கடைசி போட்டியாக இருந்தது.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்க புள்ளிவிபரம்
வனிந்து ஹசரங்கா 2022 ஆசியக் கோப்பையில் இலங்கை அணி கோப்பையைக் கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். அதில் ஆறு ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்தியவராக முடித்தார். 2021 டி20 உலகக்கோப்பையில் எட்டு ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஹசரங்க முதலிடம் பிடித்தார். சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில், ஹசரங்கா ஏழு இன்னிங்ஸ்களில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி மீண்டும் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை மற்றும் அக்டோபரில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கபப்டுகிறது.