கேகேஆர் அணிக்கு எதிராக வாரி வழங்கிய உம்ரான் மாலிக்கிற்கு கல்தா கொடுத்த சன்ரைசர்ஸ்
ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கியுள்ளது. விளையாடும் 11 இல் இருந்து உம்ரான் மாலிக் நீக்கப்பட்டாலும், போட்டிக்கான மாற்று வீரர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். முன்னதாக ஏப்ரல் 14 அன்று ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் பந்துவீசிய உம்றான் மாலிக் 36 ரன்களை வாரி வழங்கி இருந்தார். இதனால் சன்ரைசர்ஸ் நிர்வாகம் அதிருப்தி அடைந்த நிலையில், தற்போது உம்ரானை நீக்கி விட்டு வாஷிங்டன் சுந்தரை விளையாடும் 11 இல் சேர்த்துள்ளது.
ஐபிஎல் 2023 இல் தொடர்ந்து சொதப்பும் உம்ரான் மாலிக்
ஐபிஎல் 2022 சீசனில் அபாரமாக பந்து வீசி மிகச்சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்திய உம்ரான் மாலிக் நடப்பு சீசனில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் உம்ரான் மாலிக் ஒரு போட்டியில் மட்டுமே தன்னுடைய முழுமையான கோட்டாவான 4 ஓவர்களை வீசியுள்ளார். உம்ரான் மாலிக் இந்த சீசனில் இதுவரை 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், ஓவருக்கு சராசரியாக 11.09 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.