Page Loader
Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள்
டாப் விளையாட்டு செய்திகள்

Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2023
08:24 am

செய்தி முன்னோட்டம்

பேட்மிண்டனில், புதன்கிழமை (செப்டம்பர் 13) ஹாங்காங்கில் உள்ள கவுலூனில் நடந்த ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய ஜோடியான அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடி முன்னேறியது. தனிஷா மற்றும் அஷ்வினி, சீன தைபேயின் லீ சியா சின் மற்றும் டெங் சுன் ஹ்சுன் ஜோடியை 21-19 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது. இதையடுத்து, ஜப்பானின் முதல்நிலை ஜோடியான மயூ மட்சுமோட்டோ மற்றும் வகானா நாகஹாராவுடன் மோத உள்ளனர். இதற்கிடையில், லக்ஷ்யா சென் தனது முதுகில் வலி ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். பிரியன்ஷு ரஜாவத் 13-21, 14-21 என்ற கணக்கில் ஜப்பானின் காந்தா சுனேயாமாவிடம் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.

Asia Cup PAK vs SL looks like virtual semi final

அரையிறுதி ஆட்டம்போல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள PAK vs SL கிரிக்கெட் போட்டி

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் ஐந்தாவது போட்டி வியாழக்கிழமை (செப்டம்பர் 14) பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற உள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் நிலையில், இந்தியா தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. வங்கதேச அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய இரண்டிலும் தோல்வியைத் தழுவியதால், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ளது. இதனால் வியாழக்கிழமை நடக்கும் போட்டி ஒரு அரையிறுதி ஆட்டம் போல் மாறியுள்ளது.

India football squad for Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

இந்தியா தனது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான கால்பந்து அணியை புதன்கிழமை (செப்டம்பர் 13) அறிவித்தது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு சுனில் சேத்ரி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தியன் சூப்பர் லீக் கிளப் அணிகள் வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு விடுவிப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்து கிளப் அணிகள் வீரர்களை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இதன்பிறகே, இந்திய அணியை அறிவித்த கால்பந்து கூட்டமைப்பு, வீரர்களை விடுவிக்க சம்மதம் தெரிவித்த கிளப் நிர்வாகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

Trent Boult breaks record by taking 5 wickets

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிரென்ட் போல்ட் சாதனை

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் புதன்கிழமை (செப்டம்பர் 13) அன்று ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6வது 5 விக்கெட்டுகளை பதிவு செய்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட் எடுத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை போல்ட் முறியடித்தார். எனினும், இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மாலனின் அபார ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன்கள் குவித்தது. மேலும், நியூசிலாந்து பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இறுதியில் 181 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

Poland removes football coach for loss

தொடர் தோல்வியால் பதவியேற்ற 8 மாதத்தில் பயிற்சியாளரை நீக்கிய கால்பந்து அணி

அல்பேனியாவில் நடந்த ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகவும் மதிப்பு மிக்க யூரோ 2024க்கு தகுதி பெறுவதில் போலந்து கால்பந்து அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த போலானது கால்பந்து சங்கம், பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸை நீக்குவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் நடந்த பிபா உலகக்கோப்பையில் தோல்வியடைந்த பிறகு, அப்போதைய பயிற்சியாளரை நீக்கிவிட்டு, ஜனவரியில் சாண்டோஸ் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், அணிக்கு தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்றுக் கொடுப்பதால், இவரையும் நீக்கிவிட்டு வேறு பயிற்சியாளரை நியமிக்க போலந்து முடிவு செய்துள்ளது.