Sports Round Up : துப்பாக்கிச் சுடுதலில் தங்கங்களை வாரிக்குவித்த இந்தியா; ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி; முக்கிய விளையாட்டு செய்திகள்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 27) இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை வாரிக் குவித்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் 50 மீ 3பி போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா தங்கமும், ஆஷி சௌக்சே வெண்கலமும் வென்றனர். 25 மீ பிஸ்டல் அணி பிரிவில் இந்தியா தங்கமும், 50 மீ 3பி அணி பிரிவில் வெள்ளியும் வென்றது. 25 மீ பிஸ்டல் தனிநபர் பிரிவில் இஷா சிங் வெள்ளி, ஸ்கீட் அணி பிரிவில் வெண்கலம் மற்றும் பாய்மர படகு டிங்கி ஐஎல்சிஏ-7 தனிநபர் போட்டியில் விஷ்ணு சரவணன் வெண்கலமும் வென்றனர். மேலும், ஸ்கீட் தனிநபர் பிரிவில் அனந்த் ஜீத் சிங் வெள்ளி வென்றார்.
டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள வீரர்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை நடந்த ஆடவர் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் மங்கோலியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் 314 ரன்களை எடுத்த நேபாளம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணி என்ற சாதனை படைத்துள்ளது. மேலும் மங்கோலியாவை 273 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக மாறியுள்ளது. இதற்கிடையே டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் என்ற சாதனையை வைத்திருந்த யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், குஷால் மல்லா 34 பந்துகளில் 100 ரன்கள் எட்டி, அதிவேக சதம் அடித்த ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
மகளிர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை நடந்த மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிங்கப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியின் முதல் பாதி முடிவில் இந்திய ஹாக்கி அணி 8 கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், சிங்கப்பூர் கோல் எதுவும் அடிக்காமல் மிகவும் பின்தங்கியது. மேலும், இரண்டாம் பாதியில் சிங்கப்பூர் அணி தற்காப்பு ஆட்டத்தை ஆடினாலும், அதை முறியடித்து இந்தியா மேலும் 5 கோல்களை அடித்தது. சிங்கப்பூர் மகளிர் ஹாக்கி அணி கடைசி வரை கோல் எதுவும் அடிக்காத நிலையில், இந்தியா இறுதியில் 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்
புதன்கிழமை ஐசிசி வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், பாபர் அசாம் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ஷுப்மன் கில் கடந்த வாரம் 814 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிய நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 847 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளார். முதலிடத்தில் உள்ள பாபர் அசாம் 857 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், ஷுப்மன் கில் அவரை நெருங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பங்கேற்று சிறப்பாக ஆகியிருந்தால், அவர் முதலிடத்தை கைப்பற்றி இருப்பார். ஆனால், அது நடக்காத நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
INDvsAUS 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.