Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கம்; மேலும் பல முக்கிய செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரின் 12வது நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இந்தியா கூடுதலாக ஐந்து பதக்கங்களை கைப்பற்றியது. இதில் மூன்று தங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் அடங்கும். மூன்று தங்கங்களை பொறுத்தவரை ஆடவர் மற்றும் மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் பிரிவிலும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது. மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கால் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். மேலும் சவுரவ் கோஷல் ஸ்குவாஷ் தனிநபர் போட்டியில் வெள்ளி வென்றார். இதன் மூலம், 12வது நாள் முடிவில் இந்தியா 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 86 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
வியாழக்கிழமை நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி அதிரடியாக விளையாடி 37வது ஓவரிலேயே இலக்கை எட்டினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், கான்வே மற்றும் ரவீந்திரா ஆகிய இருவரும் சதமடித்தனர்.
தொடர்ச்சியாக ஐந்துமுறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீரர்
வியாழக்கிழமை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷ் நிகழ்வின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் மலேசியாவின் யான் யோவிடம் தோல்வியைத் தழுவி வெள்ளி வென்றார். முன்னதாக, இந்த போட்டியில் சவுரவ் கோஷல் 11-9, 9-11, 5-11, 7-11 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் தங்கம் பெறும் வாய்ப்பை இழந்தாலும், வெள்ளி வென்ற அவர் 2006 முதல் தொடர்ச்சியாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் இதற்கு முன்பு தொடர்ச்சியாக ஐந்து முறை பதக்கம் வென்றிராத நிலையில், சவுரவ் கோஷல் இந்த சாதனையை செய்த முதல் வீரர் ஆனார்.
திருநங்கை சர்ச்சை; நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய விளையாட்டு வீராங்கனை ஸ்வப்னா பர்மன்
இந்திய ஹெப்டத்லெட் வீராங்கனை ஸ்வப்னா பர்மன், திருநங்கை தொடர்பான சர்ச்சையில் நந்தினி அகசாராவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இழந்த பிறகு, 2018 சாம்பியன் ஆன ஸ்வப்னா பர்மன், அகசாராவை திருநங்கை என்று குற்றம் சாட்டியிருந்தார். அவர் இது தொடர்பாக ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு, மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். எனினும், கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது எக்ஸ் பதிவை நீக்கினார். இந்நிலையில், தற்போது தனது சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்வப்னா, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கின் பதவிக்காலம் நீட்டிப்பு
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷாஜி பிரபாகரன், இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் மற்றும் உதவி தலைமை பயிற்சியாளர் மகேஷ் கவ்லி ஆகியோரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பின் மூலம் இந்த அறிவிப்பை ஷாஜி பிரபாகரன் உறுதி செய்துள்ளார். இதன்படி, இகோர் ஸ்டிமாக் 2026 வரை இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார். தனது பதவி நீட்டிப்பு குறித்து பேசிய இகோர் ஸ்டிமாக், 2026 பிபா கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணியை பங்கேற்க வைப்பதே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.