ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் 2024 சீசன் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் துபாயில் வீரரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஈடுபட்டு வருகிறார். போட்டிக்காக அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. தோனி ஐபில் போட்டியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்ற பேச்சு பல வருடங்களாக உலவி வரும் நிலையில், தோனியின் ப்ராக்டிஸ் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் களத்தில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் : சாட்விக் - ஷிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு தகுதி
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனினும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். மலேசியாவின் கோலாலம்பூரில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது, இந்தோனேஷியாவின் முகம்மது ஷோஹிபுல் ஃபிக்ரி, மவுலானா பாகஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் இணை, 21-18, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டம், இன்று இரவு மொகாலியில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி, இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் அணி, சில தினங்களுக்கு முன்னரே இந்தியா வந்திறங்கி விட்டது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்தியாவுடனான இருதரப்பு தொடரில் பங்கு கொள்வது அந்த அணிக்கு இதுவே முதன்முறையாகும்.
தென்னாப்பிரிக்காவில் ஹாக்கி போட்டி: 26 பேர் கொண்ட அணியை அறிவித்தது இந்தியா
நான்கு நாடுகள் பங்கு பெறும் ஆடவர் ஹாக்கி போட்டி, ஜனவரி 22 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பிரான்ஸ், நெதர்லாந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை பங்கேற்கின்றன. இந்த போட்டி தொடருக்கான 26 பேர் கொண்ட அணியை நேற்று இந்தியா அறிவித்தது. இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குவார், மற்றும் ஹர்திக் சிங் துணை கேப்டனாக செயல்படுவார்.
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார் நான்சி
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நான்சி, 252.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அதோடு அவர் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 252.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். மறுபுறம், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் 228.7 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.