Sports Round Up: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) போட்டி புதன்கிழமை நடைபெற்றது. கௌதம் கம்பீர், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்காகவும், குஜராத்துக்காக ஸ்ரீசாந்த்தும் விளையாடினர். அப்போட்டியின் போது கௌதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று, வியாழன், இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளிவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஸ்ரீசாந்த் தன்னிலை விளக்கம் தந்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், கவுதம் கம்பிர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறினார். மேலும் கம்பிர், பல ஆண்டுகளாக, வீரேந்திர சேவாக் போன்ற மூத்த அணி வீரர்களை மதிக்கப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான புதிய லோகோ
T20I கிரிக்கெட்டின் உலகக் கோப்பைக்கான புதிய லோகோவை ICC வெளியிட்டுள்ளது. "சர்வதேச T20 கிரிக்கெட்டின் உச்சமான, ICC T20 உலகக் கோப்பைக்கான புதிய லோகோவை வெளிப்படுத்தியதன் மூலம் ஒரு துடிப்பான தோற்றத்தைப் பெற்றுள்ளது. அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைக்கும் இந்த ஆட்டம், இப்போது புதிய லோகோவுடன் விளையாடப்படவுள்ளது. இது இந்த விளையாட்டின் இடைவிடாத ஆற்றலின் சாரத்தை படம்பிடிக்கும் பிராண்ட் அடையாளம்" என்று ஐசிசி அறிக்கை தெரிவிக்கிறது.
BAN vs NZ: மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து
வங்கதேசம் - நியூஸிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மிர்பூரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியானது, 66.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி சற்று தடுமாறிக்கொண்டிருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 12.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 12, கிளென் பிலிப்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், நேற்று மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா தோல்வி
ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது. கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஸ்பெயினுடன் மோதியது. இதில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை கனடாவுடன் மோதுகிறது.
ஜனவரி 23-ல் உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் தொடர்
உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 23 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இப்போட்டியின் முதல் சீசன் கோவாவில் நடைபெற்ற நிலையில், அடுத்த சீசன் ஜனவரியில் நடக்கவுள்ளது. இந்த தொடரானது உலக டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வருடத்தில் நடத்தும் 6 தொடர்களில் ஒன்றாகும். உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் 30 பேர் இந்தத்தொடரில் கலந்து கொள்வார்கள். போட்டியாளர்கள், தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். இத்தொடரில் வெல்பவருக்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும், தரவரிசைப் புள்ளிகளும் வழங்கப்படும்.