Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) அதன் மூன்று வீரர்களான நவீன்-உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஃபசல் ஹக் ஃபரூக்கி ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகளாக தடையில்லாச் சான்றிதழை வழங்காதது ஐபிஎல் 2024 இல் அவர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. திங்களன்று (டிசம்பர் 25) ஒழுங்கு நடவடிக்கையாக, மூன்று வீரர்களுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தங்களை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது. முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முறையே நவீன் மற்றும் ஃபரூக்கியைத் தக்கவைத்துள்ளன. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த வாரம் நடந்த ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் முஜீப்பைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி லீக்கில் 1000 ரெய்டு புள்ளிகளை பெற்று சாதனை படைத்த நவீன் குமார்
திங்களன்று சென்னையில் நடந்த பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான தபாங் டெல்லி அணியின் ஆட்டத்தின் போது நவீன் குமார் புரோ கபடி லீக்கில் 1000 ரெய்டு புள்ளிகளைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம், பர்தீப் நர்வால், மனிந்தர் சிங், பவன் செஹ்ராவத், ராகுல் சவுதாரி மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்குப் பிறகு புரோ கபடி லீக் வரலாற்றில் இந்த சாதனை படைத்த ஆறாவது வீரர் ஆனார். 990 புள்ளிகளுடன் திங்கட்கிழமை களமிறங்கிய நவீன், ஒரு சூப்பர் 10ஐப் பதிவு செய்து இந்த மைல்கல்லை எட்டினார். நவீன் எக்ஸ்பிரஸ் என்ற புனைப்பெயர் கொண்ட அவர், லீக்கின் ஏழாவது மற்றும் எட்டாவது சீசன்களில் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
மெல்போர்னில் இரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் இணைந்து ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கினர். இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒன்றாக இருப்பதை பார்க்கலாம். பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளரும் தேர்வாளருமான முகமது ஹபீஸும் இதில் கலந்து கொண்டார்.
2024 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கான அட்டவணை
2024 ஆம் ஆண்டு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜனவரி 15 ஆம் தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபனுடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது. ஆஸ்திரேலிய ஓபனின் 112வது சீசன் ஜனவரி 15இல் தொடங்கி 28 அன்று மெல்போர்ன் பூங்காவில் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து மே 26 முதல் ஜூன் 9 வரை பாரிஸில் ஃபிரஞ்சு ஓபனும், ஜூலை 1 முதல் 14 வரை லண்டனில் விம்பில்டனும் நடைபெற உள்ளது. இறுதியாக, அமெரிக்காவின் நியூயார்க்கில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை யுஎஸ் ஓபன் நடைபெறுகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்தது பிசிசிஐ
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் கிரிக்கெட் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ திங்கட்கிழமை அறிவித்துள்ளது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2இல் வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளன. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜனவரி 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளன. இந்த போட்டிகள் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.