Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியிருந்தது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொரில் மோதுகின்றன ஆஸ்திரேலிய பெண்கள் அணியும், இந்திய பெண்கள் அணியும். முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்கள் ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தியிருந்தது இந்திய பெண்கள் அணி. இன்று தொடங்கி நடைபெறவிருக்கும் மூன்று டி20 போட்டிகளுமே நவிமும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்திலேயே நடைபெறவிருக்கின்றன.
தென்னாப்பிரிக்காவில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா:
தென்னாப்பிரிக்காவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது இந்திய அணி. முதல் போட்டியில் மூன்று நாட்களுக்குள்ளாகவே தென்னாப்பிரிக்க அணியிடம், இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில், இரண்டாவது போட்டியில் 5 செஷன்களுக்குள்ளாகவே தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கிறது இந்தியா. மேலும், கேப்டவுனில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிய கிரிக்கெட் அணி ஒன்று வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. 2021-ல் ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளாக வெற்றிகொள்ளப்படாத காபா கோட்டையைத் தகர்த்ததைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவிலும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா. மேலும், இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனும் செய்திருக்கிறது இந்தியா. 2010ம் ஆண்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்திருக்கிறது இந்தியா.
வரலாற்றிலேயே மிகக் குறுகிய டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, இரண்டு நாட்களில் ஐந்து செஷன்களுக்குள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலம் நடைபெற்ற டெஸ்ட் போட்டி என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் 642 பந்துகளிலேயே (107 ஓவர்கள்) 40 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் வெற்றியுடன், நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
2024 டி20 உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டி:
இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும், அமெரிக்காவும் சேர்ந்த இந்தாண்டு ஜூன் மாதம் நடத்தவிருக்கின்றன. இந்நிலையில், இந்தத் தொடர் குறித்த சில தகவலகள் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படவிருக்கும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய ஐந்து அணிகள் ஒரே குழுவில் இடம்பெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ஜூனி 5, 9, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முறையே அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளை இந்திய அணி எதிர்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் முதல் மூன்று போட்டிகள் நியூயார்க் நகரிலும், கடைசிப் போட்டி ஃபுளோரிடாவிலும் நடத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் சூர்யகுமார் யாதவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்:
2023ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான வீரர்களின் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், இரண்டு பிரிவுகளில் சூர்யகுமார் யாதவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. முதலில், 2023ம் ஆண்டுக்கான ஆண்கள் டி20 கிரிக்கெட் வீரர் (Men's T20I Cricketer of the Year) விருதுக்கு சூர்யகுமார் யாதவ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த விருதை சூர்யகுமார் யாதவ் பெற்றிருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 171 ரன்களை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 2023-ன் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் (Men's Emerging Player of the Year) விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.