Sports Round Up: இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்; பெண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்த இங்கிலாந்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 43வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. நேற்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ். முதலில் ஆடிய வங்கதேச அணியில் அனைத்து பேட்டர்களும் தங்களால் ஆன சிறிய பங்களிப்பை அளிக்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களைக் குவித்தது வங்கதேச அணி. 307 என்ற பெரிய ஸ்கோரை இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா சேஸ் செய்தது இல்லை. ஆனால், இன்றைய போட்டியில் மிட்சல் மார்ஷ் திடமாக நின்று 177 ரன்களைக் குவிக்க, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் அரைசதங்களுடன் 45 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிய இலங்கை:
கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது இலங்கை அணி. அதற்கு முக்கிய காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் அந்த அணியின் செயல்பாடுகள் அமைந்துவிட்டது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் முடித்திருக்கிறது இலங்கை. இதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேரிடியாகப் பங்கேற்பதற்கான தகுதியை இழந்திருக்கிறது அந்த அணி. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக 2025 சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறும். தற்போது 9வது இடத்தில் முடித்ததன் காரணமாக, சாம்பியன் கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடி அதன் மூலமே தொடரில் அந்த அணி கலந்து கொள்ள முடியும்.
இந்திய சுற்றுப் பயணத்திற்கான பெண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்த இங்கிலாந்து:
இந்த உலகக்கோப்பையைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி. இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மோதவிருக்கின்றன இங்கிலாந்து மற்றும் இந்திய பெண்கள் அணியினர். இந்த போட்டிகளுக்கான பெண்கள் அணியை நேற்று அறிவித்திருக்கிறது இங்கிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இந்த அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று டி20 போட்டிகளுமே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்கும் நிலையில், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது நவி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் டிசம்பர் 14ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது.
நவம்பர் 23ல் தொடங்கும் விஜய் ஹசாரே கோப்பை:
50 ஓவர்கள் பார்மெட்டில் நடைபெறும் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டுத் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. 38 அணிகள் போட்டியிடும் இத்தொடரின் முதல் A, B மற்றும் C பிரிவுகளில் எட்டு அணிகளும், D மற்றும் E பிரிவுகளில் ஏழு அணிகளும் இடம்பெற்று போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. கடந்த முறை கோப்பையை வென்ற சௌராஷ்டிரா அணி A பிரிவிலும், தமிழ்நாடு அணி D பிரிவிலும் இடம்பெற்றிருக்கிறது. விஜய் ஹசாரே கோப்பையை அதிக முறை தமிழக கிரிக்கெட் அணியே வென்றிருக்கிறது. இதுவரை ஐந்து முறை தமிழக அணி விஜய் ஹசாரே கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அரையிறுதிக்குச் செல்வதற்கு பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்பட்ட இன்றைய போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்ததிலேயே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோயிருந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்களை குவித்திருக்க, அதனை சேஸ் செய்ய முடியாமல் 43.3 ஓவர்களிலேயே 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். இந்தத் தோல்வியுடன் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியது.