Sports Round Up : ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கையிடம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்து 115 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 118 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. மேலும், பாகிஸ்தான் பின்தங்கிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடக்க உள்ள ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாம் ஓபன் 2023 : இந்திய ஜோடி சிம்ரன் சிங்கி - ரித்திகா தாக்கர் காலிறுதியில் தோல்வி
வியட்நாம் ஓபன் சூப்பர் 100 பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடியான சிம்ரன் சிங்கி மற்றும் ரித்திகா தாக்கர் வெள்ளிக்கிழமை (செப்.15) நடைபெற்ற காலிறுதியில் தோல்வியைத் தழுவி வெளியேறினர். மூன்றாம் நிலை வீராங்கனைகளான சிம்ரன் மற்றும் ரித்திகா ஜோடி, 21-18, 15-21, 15-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஜியாங் யி-ஹுவா மற்றும் லீ ஜி குயிங் ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, ஒற்றையர் பிரிவில் அதிதி பட், தன்யா ஹேமந்த், கலப்பு இரட்டையர் பிரிவில் பொக்கா நவநீத்-குக்கப்பள்ளி மனீஷா, சனாயத் ஜோஷி-காவ்யா குப்தா, இரட்டையர் பிரிவில் சதீஷ்குமார் கருணாகர-ஆத்யா வரியாத், காவ்யா குப்தா-தீப்ஷிகா சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறினர். இதனால் இந்தியாவின் பதக்க கனவு முடிவுக்கு வந்துள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் : மொரோக்கோவுடனான மோதலுக்கான இந்திய அணி அறிவிப்பு
சனி (செப்டம்பர் 16) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லக்னோவில் உள்ள விஜயந்த் காந்த் மினி ஸ்டேடியத்தில் நடைபெறும் உலக குரூப் II டையில் மொராக்கோவை எதிர்கொள்ளும் டேவிஸ் கோப்பை அணியை இந்திய கேப்டன் ரோஹித் ராஜ்பால் அறிவித்தார். ரோஹன் போபண்ணா, சுமித் நாகல், யூகி பாம்ப்ரி, சசிகுமார் முகுந்த் மற்றும் திக்விஜய் பிரதாப் சிங் ஆகிய 5 பேர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதற்கிடையே, போட்டி நடைபெறும் லக்னோ நகரில் அதிக ஈரப்பதம் நிலவுவதால் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் வசதிக்காக போட்டி நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் ராஜ்பால் அறிவித்தார்.
பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கிடையாது : மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் எதிலும் இந்தியா விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார். பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட் உறவை மீண்டும் தொடங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளின் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட நிலையில், அனுராக் தாக்கூர் மீண்டும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இருதரப்பு போட்டிகளில் பங்கேற்காத நிலையில், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பையில் இந்தியா வங்கதேசத்திடம் அதிர்ச்சித் தோல்வி
ஆசிய கோப்பை 2023 தொடரின் கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார். 266 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் சதமடித்து 121 ரன்கள் குவித்தார். எனினும், அவரைத் தவிர இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், கடைசி நேரத்தில் அக்சர் படேல் 42 ரன்கள் குவித்தும், விக்கெட் கைவசம் இல்லாததால் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இந்த காலவரிசையைப் பகிரவும்