Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் சதமடித்தார். தொடர்ந்து இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ராச்சின் ரவீந்திரா சதமடித்தாலும், கடைசி வரை போராடி அந்த அணி 383 ரன்கள் மட்டுமே எடுத்ததால், தோல்வியைத் தழுவியது.
ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேசத்தை வாரிச் சுருட்டியது நெதர்லாந்து
சனிக்கிழமை நடந்த மற்றொரு ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட நெதர்லாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்ததன் மூலம், நெதர்லாந்து 229 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் இந்த ஸ்கோரை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்து பந்துவீச்சில் நிலைகுலைந்து 142 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியை 111 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியா 111 பதக்கங்களுடன் நிறைவு செய்தது. முன்னதாக, 108 பதக்கங்களுடன் போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை களமிறங்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் மேலும் மூன்று தங்க பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. மேலும், பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துடன் போட்டியை நிறைவு செய்துள்ளது. இதற்கிடையே, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் வென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மலேசியாவை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி
ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மலேசியாவுக்கு எதிரான தனது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. பெனால்டி கார்னர் மாற்றங்கள் அணியின் ஒட்டுமொத்த செயல்திறனில் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், இந்தியத் தரப்பு முந்தைய போட்டியை விட அதிக வலிமையுடன் களமிறங்கி மலேசியாவை பந்தாடினர். இந்த போட்டியில் வந்தனா கட்டாரியா சொந்தமாக இரண்டு கோல்களை அடித்ததோடு, மற்றவர்கள் கோல் அடிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்காக ஆட்ட நாயகி விருதை வென்றார். இதற்கிடையே, சனிக்கிழமை நடந்த மற்ற இரண்டு ஆட்டங்களில் சீனா தாய்லாந்தையும், ஜப்பான் தென்கொரியாவையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.
சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பையில் மலேசியாவை வீழ்த்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி
மலேசியாவின் ஜோகூர் பாருவில் சனிக்கிழமை நடைபெற்ற சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பையில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது இரண்டாவது குரூப் பி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. முன்னதாக, இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3-3 என்ற கணக்கில் டிராவில் முடித்த நிலையில், இந்த போட்டியில் மலேசியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் பி பிரிவில் இந்தியா இரண்டு ஆட்டங்களில் நான்கு புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய பாகிஸ்தானும் நான்கு புள்ளிகள் பெற்றிருந்தாலும், குறைவான கோல் வித்தியாசத்தால் இந்தியாவை விட பின்தங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியா தனது கடைசி குரூப் ஆட்டத்தில் திங்கட்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.