சாத்விக்/சிராக் ஜோடிக்கு கேல்ரத்னா, முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு
பேட்மிண்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருதும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உட்பட 26 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வருடாந்திர விளையாட்டு விருதுகளுக்கான பரிந்துரைகளை விளையாட்டு அமைச்சகம் இறுதி செய்து புதன்கிழமை (டிசம்பர் 20) பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜனவரி 9இல் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சிராக் மற்றும் சாத்விக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், உலக சாம்பியன்ஷிப் வெண்கலம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றனர். முகமது ஷமி ஒருநாள் உலகக்கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக உள்ளார்.
2023க்கான அர்ஜுனா விருதுகள்
வில்வித்தை-ஓஜாஸ் பிரவின் தியோடலே, அதிதி கோபிசந்த் சுவாமி தடகளம்-முரளி ஸ்ரீசங்கர், பருல் சவுத்ரி குத்துச்சண்டை-முகமது ஹுசாமுதீன் செஸ்-வைஷாலி கிரிக்கெட்-முகமது ஷமி குதிரையேற்றம்-அனுஷ் அகர்வாலா, திவ்யகிருதி சிங் கோல்ப்-திக்ஷா தகர் ஹாக்கி-கிரிஷன் பகதூர் பதக், சுசீலா சானு, கபடி-பவன் குமார், ரிது நேகி, கோ-கோ-நஸ்ரின் லான் பவுல்ஸ்-பிங்கி துப்பாக்கிச் சுடுதல்-ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், இஷா சிங் ஸ்குவாஷ்-ஹரிந்தர் பால் சிங் சந்து டேபிள் டென்னிஸ்-அய்ஹிகா முகர்ஜி மல்யுத்தம்-சுனில் குமார், ஆன்டிம் வுஷு-நௌரெம் ரோஷிபினா தேவி பாரா வில்வித்தை-ஷீதல் தேவி பார்வையற்றோர் கிரிக்கெட்-இல்லூரி அஜய் குமார் ரெட்டி பாரா கேனோயிங்-பிராச்சி யாதவ்
விருது வென்றவர்களின் இதர பட்டியல்
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது 2023-சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி(பேட்மிண்டன்). பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது-லலித் குமார்(மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ்(செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங்(ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர்(மல்லகாம்ப்). பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனை விருது-ஜஸ்கிரத் சிங் கிரேவால்(கோல்ப்), பாஸ்கரன்(கபடி), ஜெயந்த குமார் புஷிலால்(டேபிள் டென்னிஸ்). தயான் சந்த் வாழ்நாள் சாதனை விருது-மஞ்சுஷா கன்வர்(பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா(ஹாக்கி), கவிதா செல்வராஜ்(கபடி). மௌலானா அபுல் கலாம் ஆசாத் டிராபி 2023-குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்(ஒட்டுமொத்த வெற்றியாளர் பல்கலைக்கழகம்), லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம், பஞ்சாப்(1வது ரன்னர்-அப்), குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம், குருஷேத்ரா(2வது ரன்னர் அப்).