மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) இலங்கையின் 130 ரன்கள் இலக்கை துரத்தத் தவறிய தென்னாப்பிரிக்கா, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தென்னாப்பிரிக்காவின் நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் சுனே லூஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி கடைசி வரை போராடியும் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுக்க முடிந்ததால், மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இலங்கை vs தென்னாப்பிரிக்கா மகளிர் டி20 போட்டி புள்ளி விபரங்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்து அரைசதம் அடித்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். மேலும் சாமரி அதபத்து 17 வயதான விஷ்மி குணரத்னேவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 86 ரன்களை எடுத்தனர். விஷ்மி குணரத்னேவும் 35 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் சுனே லூஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். இலங்கையின் பந்துவீச்சாளர் இனொக ரணவீரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், ஒஷாதி ரணசிங்க மற்றும் சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.