உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் மஹி: ஐபிஎல் ஓய்வை அறிவித்த தோனிக்கு மனைவி சாக்ஷி நெகிழ்ச்சி பதிவு
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அவரது மனைவி சாக்ஷி தோனி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாகத் தோனியின் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சாக்ஷி, தோனியுடன் விடுமுறையில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சாக்ஷி நெகிழ்ச்சி
புதிய தொடக்கங்களுக்கும் புதிய சாகசங்களுக்கும் வாழ்த்துகள்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி தோனி, "அழகான புதிய அத்தியாயங்கள் தொடங்குவதற்காகச் சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரத்தான் வேண்டும்".
"தனிப்பட்ட முறையில் எங்களுக்குத் தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ, இத்தனை ஆண்டுகளாக மஹியை நேசித்து, ஆதரித்து, நம்பிய அனைவருக்கும் எங்களது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்".
"உங்களின் அன்பிற்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். புதிய தொடக்கங்களுக்கும், புதிய சாகசங்களுக்கும், இன்னும் பல அழகான நினைவுகளுக்கும் வாழ்த்துகள். உங்களை நினைத்து எப்போதும் மிகவும் பெருமைப்படுகிறேன் மஹி" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிஎஸ்கேவின் புதிய ஆலோசகர்
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தோனி
சமூக வலைதளங்களில் எப்போதும் அமைதி காக்கும் 45 வயதான எம்.எஸ். தோனி, தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் சிறப்பு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அதில், "ரசிகர்கள் என்னைத் தவறென்று நிரூபித்துவிட்டார்கள், அதை ஏற்றுக்கொள்ள இதைவிடச் சிறந்த பாடல் இருக்க முடியாது" எனக் குறிப்பிட்டு ரசிகர்களின் அன்பிற்குத் தலைவணங்கியுள்ளார்.
2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி 12 இறுதிப்போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தோனி, காயம் மற்றும் உடற்தகுதி காரணமாக 2026 சீசனில் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.
தற்போது வீரராக ஓய்வு பெற்றாலும், வரும் ஐபிஎல் 2027 தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.