மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்னே ராணா நியமனம்
மகளிர் பிரிமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் காயம் அடைந்த பெத் மூனிக்கு பதிலாக ஸ்னே ராணா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஐபிஎல்லின் முதல் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியின் போதே பெத் முனிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. எனினும் அணியுடனேயே இருந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் 4-6 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் பெத் முனிக்கு பதிலாக லாரா வால்வார்ட் குஜராத் ஜெயண்ட்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் குஜராத் அணியின் புதிய துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெத் மூனியின் இடத்தை நிரப்புவாரா லாரா வால்வார்ட்?
ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக பெத் மூனி, கடந்த மாதம் நடந்த ஏலத்தில் ரூ.2 கோடிக்கு எடுக்கப்பட்டார். இவருடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம் மற்றும் அனாபெல் சதர்லேண்ட் ஆகியோரும் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளனர். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த நிலையில், குஜராத் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் விலகியதால் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள லாரா வோல்வார்ட் பெத் மூனியின் இடத்தை நிரப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.