மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா சாதனை
செய்தி முன்னோட்டம்
நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் முக்கிய சாதனையை முறியடித்தார். இந்தத் தொடரில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் குவித்த வீரராக ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஃபார்மில் இருந்தார். இறுதிப் போட்டிக்கு வரும்போது அவர் 389 ரன்களை வைத்திருந்தார். இறுதிப் போட்டியில் 21 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒரே உலகக் கோப்பைத் தொடரில் ஓர் இந்திய வீராங்கனை எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
சாதனை
முந்தைய சாதனை
இதற்கு முன்னர், மிதாலி ராஜ் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றத் தொடரில் 409 ரன்கள் எடுத்ததே இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஒருவருக்கான சாதனையாக இருந்தது. தற்போது ஸ்மிருதி மந்தனா அந்தச் சாதனையை முறியடித்து, தனது ஒன்பது இன்னிங்ஸ்களில் 410 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 2017 ஒருநாள் உலகக்கோப்பையில் 381 ரன்கள் எடுத்த பூனம் ராவத் உள்ளார். போட்டியைப் பொறுத்தவரை, மழையால் தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீசத் தீர்மானித்தது. நிச்சயமற்ற வானிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டே பந்துவீச முடிவெடுத்ததாகத் தென்னாப்பிரிக்கக் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்தார்.