Loading...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்: BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்: BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
09:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியதைத் தொடர்ந்து, மூத்த தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 29 வயதான ஸ்மிருதி மந்தனா, ஒருநாள் மற்றும் டி20 என இரு வடிவ வெள்ளைப் பந்து போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படுவார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிசிசிஐ

ஹர்மன்பிரீத் கவுர் விலகலும் பிசிசிஐ வரவேற்பும்

கவுஹாத்தியில் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைக்கியா, தலைமை பயிற்றுநர் அமோல் முஜும்தார் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோருடன் நடைபெற்ற மறுஆய்வு கூட்டத்திற்குப் பிறகு, கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை ஹர்மன்பிரீத் கவுர் அறிவித்தார்.

இந்திய அணிக்கு 2025-இல் உலகக்கோப்பையை பெற்றுத் தந்த அவரது தலைமையை பாராட்டிய பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் செயலாளர் தேவாஜித் சைக்கியா, அவர் தொடர்ந்து வீரராக அணியில் நீடிப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தனர்.

அனுபவம்

ஸ்மிருதி மந்தனாவின் தலைமை அனுபவம்

ஏற்கனவே இந்திய அணிக்காக 18 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள ஸ்மிருதி மந்தனா, WPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணியை 2024 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்திற்கு அழைத்து சென்று தனது தலைமைப் பண்பை நிரூபித்துள்ளார்.

இந்திய அணியை வழிநடத்துவது தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடங்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா 'ஏ' தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிக்கி பிரசாத் முதன்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கு தீப்தி சர்மா துணை கேப்டனாக செயல்படுவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT