SLvsNZ : 27 வருட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ராச்சின் ரவீந்திரா
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராச்சின் ரவீந்திரா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 565 ரன்கள் குவித்து, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களும் அடங்கும். இது ராச்சின் ரவீந்திரா பங்கேற்கும் முதல் உலகக்கோப்பை எனும் நிலையில், அறிமுக உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2019இல் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 532 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், அதை ராச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார்.
25 வயதாகும் முன் உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர்கள்
ராச்சின் ரவீந்திராவுக்கு தற்போது 23 வயதே ஆகும் நிலையில், 25 வயது ஆகும் முன் ஒரு உலகக்கோப்பை சீசனில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு, 1996இல் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்கள் எடுத்திருந்ததே ஒரு சீசனில் 25 வயது ஆகும் முன் வீரர் ஒருவர் எடுத்த அதிக ரன்களாக இருந்தது. 27 ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ராச்சின் ரவீந்திரா அதை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் பாபர் அசாம் 2019இல் 474 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும், ஏபி டி வில்லியர்ஸ் 2007இல் 372 ரன்கள் எடுத்து நான்காவது இடத்திலும் உள்ளனர்.