SLvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 171 ரன்களுக்கு சுருண்டது இலங்கை
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து இலங்கையை முதல் இன்னிங்சில் 171 ரன்களுக்கு சுருட்டியது. முன்னதாக, பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்க 2 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த குஷால் மெண்டிஸ் 6 ரன்களிலும், சதீரா சமரவிக்ரம ஒரு ரன்னிலும், சாரித் அசலங்கா 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
குஷால் பெரேரா அரைசதம்; மஹீஸ் தீக்ஷனா பொறுப்பான ஆட்டம்
இலங்கை கிரிக்கெட் அணி ஒரு பக்கம் மளமளவென விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரரான குஷால் பெரேரா பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினார். எனினும், அவரும் 51 ரன்களில் அவுட்டாகி வெளியே இலங்கை அணியின் நிலைமை பரிதாபமாக மாறியது. 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில், கடைசி விக்கெட்டுக்கு மஹீஸ் தீக்ஷனா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை அவுட்டாகாமல் 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.