கொட்டித்தீர்த்த மழை; இலங்கை vs பாகிஸ்தான் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து
இலங்கையின் கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் (ஜூலை 25) ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தானின் அப்ரார் அகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களுடன் களத்தில் இருந்தது. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி 10 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக எஞ்சிய நாள் முழுவதும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைக்கும் மழை
இலங்கையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலகின் பல பகுதிகளிலும் மழை கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் ஐந்தாம் நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு அருகாமையில் இருந்தபோது மழை நிற்காமல் பெய்ததால், அன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டு டிராவில் முடிந்தது. இதனால் ஆஷஸ் தொடரை வெல்லும் வாய்ப்பையும் இங்கிலாந்து இழந்தது. இதற்கிடையே வெஸ்ட் இண்டீசின் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், நாள் முழுவதும் பெய்த மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு டிராவில் முடிந்தது.