SL vs PAK 2வது டெஸ்ட் : மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை
பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே, கொழும்புவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் (ஜூலை 26) பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, போட்டியின் இரண்டாம் நாளில் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால், எஞ்சிய நாள் முழுவதும் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து, மூன்றாவது நாளில் 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எனும் ஸ்கோருடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 563 ரன்களுடன் களத்தில் உள்ளது. இதன் மூலம் 397 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த அப்துல்லா ஷபீக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அப்துல்லா ஷபீக், மூன்றாவது செஷன் வரை களத்தில் நின்று 322 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அப்துல்லா ஷபீக் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, காலியில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டியில் சவுத் ஷகீல் இரட்டை சதம் அடித்ததுதான், இலங்கையில் பாகிஸ்தான் வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட முதல் இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே,சவுத் ஷகீல் 57 ரன்கள் எடுத்ததன் மூலம், தனது முதல் 7 டெஸ்ட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.