அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து!
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். ஸ்டிர்லிங் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 74* ரன்கள் எடுத்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சதத்தை பூர்த்தி செய்து 103 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்டில் சதமடித்த மூன்றாவது அயர்லாந்து வீரர் ஆனார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் பங்களாதேஷுக்கு எதிராக டக்கர் சதம் அடித்தார். அதேசமயம் 2018இல் பாகிஸ்தானுக்கு எதிராக மலாஹைடில் ஓ'பிரையன் சதம் அடித்தார். ஸ்டிர்லிங் தற்போது சதமடித்ததன் மூலம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த இரண்டாவது அயர்லாந்து பேட்டர் ஆனார். இதற்கு முன்னர் ஓ'பிரைன் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளார்.
அயர்லாந்து அணியின் சார்பாக சதமடித்த நான்காவது வீரர் கர்டிஸ் கேம்பர்
பால் ஸ்டிர்லிங் ஒருபுறம் அசதமடித்து அவுட்டான நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் கர்டிஸ் கேம்பர் நிதானமாக ஆடி 111 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அயர்லாந்து அணிவிக்காக டெஸ்ட் போட்டியில் சதமடித்த நான்காவது வீரர் என்ற சிறப்பை கர்டிஸ் கேம்பர் பெற்றுள்ளார். இதற்கிடையே அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 492 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.