LOADING...
இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு மீண்டும் பயிற்சியாளரானார் ஸ்ஜோர்ட் மரிஜின்; ஒலிம்பிக் கனவு நனவாகுமா?
இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு மீண்டும் பயிற்சியாளரானார் ஸ்ஜோர்ட் மரிஜின்

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு மீண்டும் பயிற்சியாளரானார் ஸ்ஜோர்ட் மரிஜின்; ஒலிம்பிக் கனவு நனவாகுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2026
02:30 pm

செய்தி முன்னோட்டம்

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் மகளிர் இந்திய ஹாக்கி அணியை வரலாற்றுச் சிறப்புமிக்க நான்காவது இடத்திற்கு அழைத்துச் சென்ற நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்ஜோர்ட் மரிஜின், மீண்டும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஹாக்கி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்த ஹரேந்திர சிங்கிற்குப் பதிலாக 51 வயதான மரிஜின் இந்தப் பொறுப்பை ஏற்கிறார். 2017 முதல் 2021 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், ஒரு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வீராங்கனைகள் உலகத் தரத்தில் தங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்த உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய குழு

புதிய தொழில்நுட்பக் குழு

மரிஜின் மட்டுமன்றி, அணியின் செயல்பாட்டை மேம்படுத்த மேலும் சில நிபுணர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடி, அர்ஜென்டினாவின் முன்னாள் வீரரான மத்தியாஸ் விலா அனலிட்டிகல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் வேய்ன் லோம்பார்ட் அறிவியல் ஆலோசகர் மற்றும் தடகள செயல்பாட்டுத் தலைவராக மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். இவருக்கு உதவியாக ரோடெட் யிலா மற்றும் சியாரா யிலா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சவால்

முதல் சவால் மற்றும் பயிற்சி முகாம்

மரிஜின் வரும் ஜனவரி 14 ஆம் தேதி இந்தியா வருவார். அதைத் தொடர்ந்து ஜனவரி 19 முதல் பெங்களூரில் தேசியப் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. மார்ச் 8 முதல் 14 வரை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள FIH பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளே மரிஜினின் முதல் பெரிய சவாலாக இருக்கும். வீராங்கனைகளின் உடற்தகுதியே மரிஜினின் இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியக் கவனமாக இருக்கும் என்று ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே தெரிவித்துள்ளார். இவரது முந்தைய பயிற்சியின் கீழ் இந்திய அணி 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement