அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம்
அயர்லாந்து டி20 தொடருக்கான ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழு ஓய்விற்கு செல்கிறது. வழக்கமாக டிராவிட் இல்லாத சூழ்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படும் விவிஎஸ் லக்ஷ்மணும் அயர்லாந்து தொடர் நடக்கும் சமயத்தில் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் எமெர்ஜிங் வீரர்கள் முகாமை மேற்பார்வையிடுகிறார். இதனால், தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளவருமான சிதான்ஷு கோடக் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செல்ல உள்ளார்.
யார் இந்த சிதான்ஷு கோடக்?
தற்போது இந்தியா ஏ தலைமை பயிற்சியாளராகவும், தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பேட்டிங் பயிற்சியாளராகவும் சிதான்ஷு கோடக் உள்ளார். சிதான்ஷு கோடக் சர்வதேச கிரிக்கெட்டில் அறியப்படாத பெயராக இருந்தாலும், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் வீரராகவும், பயிற்சியாளராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி முதல்தர கிரிக்கெட்டில் 8,000 ரன்களுக்கு மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 3,000 ரன்களுக்கும் மேலும் எடுத்துள்ளார். ராகுல் டிராவிட் 2019 இல் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக ஆன பிறகு, கோடக் இந்தியா ஏ பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவர் இதற்கு முன்பு நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணியுடன் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.