ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
ஜனவரி 2023க்கான ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு இந்தியாவின் முகமது சிராஜ் மற்றும் நியூசிலாந்தின் டெவன் கான்வேயும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி கில் விருதை வென்றுள்ளார். ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், ஹைதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்ததோடு, தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்தது தான் அவர் விருது பெற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனையான கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் பெண்கள் பிரிவில் இந்த விருதை வென்றுள்ளார்.
ஜனவரி மாதத்தில் ஷுப்மன் கில் செயல்திறன்
கில் 2023 ஜனவரியின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் 70.21 ஸ்ட்ரைக் ரேட்டில் 116 ரன்களை விளாசினார். தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் தனது ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 19 பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர்களுடன் இரட்டை சதம் (149 பந்துகளில் 208 ரன்கள்) அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். இந்த தொடரில் கில் 360 ரன்களை குவித்தார். மேலும் பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20யிலும் 63 பந்துகளில் 126* ரன்கள் எடுத்தார்.