ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் இதுதான்; அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. ஸ்கேன் முடிவுகள் அவருக்கு மண்ணீரல் கிழிந்த காயத்தை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், அவர் சிட்னி மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) கண்காணிக்கப்பட்டு வருகிறார். அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை பிடித்தபோது ஷ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்புக் கூண்டுப் பகுதியில் இந்த மோதல் காயம் ஏற்பட்டது. மைதானத்திலிருந்து அவர் வெளியேறிய பிறகு, ஆடை மாற்றும் அறைக்குத் திரும்பியபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததுடன், மருத்துவ அறிக்கைகள் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதையும் உறுதி செய்தன.
ஐசியூ
ஐசியூவில் அனுமதி
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ மருத்துவக் குழு அவரை உடனடியாக ஐசியூவில் அனுமதித்தது. தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை சீராக இருப்பதோடு, நன்கு தேறி வருவதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பிசிசிஐ மருத்துவக் குழு அவரது காயம் மற்றும் முன்னேற்றத்தைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது அன்றாட முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்திய அணியின் மருத்துவர் சிட்னியிலேயே ஷ்ரேயாஸ் ஐயருடன் தங்கியிருப்பார். இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயர் குடும்பத்தினர் சிட்னி சென்று சிகிச்சை முடியும் வரை அங்கு உடனிருக்க தேவையான ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்து வருவதாகக் கூறப்படுகிறது.