பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் முதல் போட்டியிலிருந்து நீக்கம்!
இந்திய அணிக்கு பெரும் அடி என்று சொல்லக்கூடிய வகையில், பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது டெஸ்டில் இருந்து களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டு ஒருநாள் தொடரில் இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலக வேண்டியிருந்தது. அவர் இன்னும் குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓய்வு எடுக்குமாறு தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது கூட, அவரின் உடற்தகுதியை பொறுத்து தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் இழப்பால் தவிக்கும் இந்தியா
ஷ்ரேயாஸ் ஐயர் 2021 இல் கான்பூரில் நியூசிலாந்திற்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 10வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை ஏழு டெஸ்டில் விளையாடியுள்ள ஷ்ரேயஸ் ஐயர் 56.73 என்ற அதிகபட்ச சராசரியுடன் 624 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துள்ள நிலையில், அவர் இல்லாதது நாக்பூர் டெஸ்டில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஷ்ரேயாஸ் இல்லாத நிலையில், நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க ஆட்டத்தில் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.