தொடர் புறக்கணிப்புகளால் விரக்தி, இந்திய கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சன் பரபரப்பு பேட்டி
இந்தியாவைப் போன்ற அதிக போட்டி நிறைந்த கிரிக்கெட் சூழலில், தேசிய அணிக்குள் நுழைவது எளிதல்ல. வரலாற்றில் பல வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய லெவன் அணியில் இடம் பெறத் தவறியுள்ளனர். இதன் தற்கால உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி கோப்பையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பையின் நட்சத்திர பேட்டர் சர்ஃபராஸ் கான் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் வரவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வாய்ப்பை இழந்தார். வாய்ப்பிற்காக காத்திருந்த பலர், இறுதியில் வாய்ப்பே கிடைக்காமல் ஓய்வு பெற்றாலும், இந்த ஆண்டு 37 வயதை எட்டிய சவுராஷ்டிராவின் ஷெல்டன் ஜாக்சன் இன்னும் நம்பிக்கையை கைவிடவில்லை.
தோனி, தினேஷ் கார்த்திக்கை பார்த்து ஊக்கம் பெற்ற ஷெல்டன் ஜாக்சன்
ஷெல்டன் ஜாக்சன் கடந்த சீசனில் சௌராஷ்டிராவுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாது, கடந்த ஆண்டு இந்தியா 'ஏ' அணிக்கு தன்னை தேர்வு செய்யாதது குறித்து விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அளித்த பேட்டியில், விரக்தி அடைந்தாலும், நம்பிக்கையை கைவிடவில்லை என்றும், 37 வயதில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியது, 41 வயதில் ஐபிஎல் கோப்பையை எம்எஸ் தோனி வென்றது தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் தேர்வு செய்யப்படாது குறித்து தேர்வாளரை அழைத்து நான் ஏன் என்று கேட்க மாட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.