'உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டால்' ; மனம் திறந்த ஷர்துல் தாக்கூர்
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடரையும் 2-1 என கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 37 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தொடரில் முகமது சிராஜ் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மூன்று போட்டிகளிலும் சிறப்பாகசெயல்பட்டு, தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆனார். எனினும் பல்வேறு காரணங்களால், 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு கிடைப்பது கஷ்டம் எனக் கூறப்படுகிறது.
விளையாடும் லெவனில் இடத்தை உறுதி செய்வதற்காக விளையாடவில்லை
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய ஷர்துல் தாக்கூர், விளையாடும் லெவனில் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடவில்லை எனக் கூறினார். மேலும், "அணி நிர்வாகம் என்னை ஒருநாள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யாவிட்டாலும், அது அவர்களின் முடிவாக இருக்கும். என்னால் அதிகம் செய்ய முடியாது. எனது இடத்திற்காக நான் விளையாட வேண்டும் என்று நினைப்பது தவறாகும். என் வேலையைச் செய்து விட்டுப் போகிறேன். நான் தனிப்பட்ட வெற்றியைப் பெறுகிறேனா இல்லையா என்பதை விட அணியின் தேவை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும் சரி, நான் வாய்ப்பு கிடைக்கும்போது அணிக்காக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன்." என்று ஷர்துல் கூறினார்.