ஆட்டநாயகன் ஷமியின் அபார பந்துவீச்சு! ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் திரில் வெற்றி!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மிகத் துல்லியமான பந்துவீச்சு மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட்டின் பொறுப்பான ஆட்டம் லக்னோ அணியின் வெற்றிக்கு வித்திட்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த லக்னோ அணிக்கு, முகமது ஷமி ஒரு கனவுத் தொடக்கத்தை அளித்தார். தனது 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
டாப் ஆர்டர் சரிவு
ஷமியின் அபாரப் பந்துவீச்சு
ஷமியின் அனல் பறக்கும் பந்துவீச்சால் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் ஐதராபாத் அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. சரிவில் இருந்த அணியை ஹென்ரிச் கிளாசென் (62) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (56) ஜோடி மீட்டெடுத்தது. இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டிற்கு 116 ரன்கள் சேர்த்து ஐதராபாத் அணியின் புதிய சாதனையைப் படைத்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 156 ரன்கள் எடுத்தது.
லக்னோவின் நிதானமான ரன் சேஸிங்
ரிஷப் பண்ட்டின் அதிரடி
157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு, எய்டன் மார்கிரம் (45) அதிரடித் தொடக்கம் கொடுத்தார். பிட்ச் பேட்டிங்கிற்குச் சற்று கடினமாக இருந்ததால் நடுவரிசையில் விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும், கேப்டன் ரிஷப் பண்ட் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜெயதேவ் உனத்கட் வீசிய பந்துகளை நேர்த்தியாகக் கையாண்டு 19.5 ஓவர்களில் லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ரிஷப் பண்ட்.