ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷமி
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33வது போட்டியில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது இந்திய அணி. ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியைப் போன்றே, நேற்றும் 55 ரன்களுக்குகள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, மாபெரும் 302 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது இந்தியா. நேற்றைய போட்டியில் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிற்காக சிறப்பாக பந்துவீசி வரும் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த ஐந்து விக்கெட்டுகளுடன் ஒருநாள் உலகக்கோப்பைத் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் முகமது ஷமி.
புதிய சாதனை படைத்த ஷமி:
முன்னதாக இந்தியாவிற்காக ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தனர் ஜாகீர் கானும், ஜவகல் ஸ்ரீநாத்தும். தற்போது 45 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களது சாதனையை முறியடித்திருக்கிறார் முகமது ஷமி. மேலும், நான்கு ஐந்து விக்கெட் ஹால்களைப் பெற்று, இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கைப் பின்தள்ளியிருக்கிறார் முகமது ஷமி. நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் 3ல் மட்டும் பங்கெடுத்து, 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் ஷமி. மேலும், இந்த 14 விக்கெட்டுகளுடன் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.