எம்எஸ் தோனியால் கூட செய்ய முடியாத சாதனை; வரலாறு படைத்தார் வெஸ்ட் இண்டீஸின் சாய் ஹோப்
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சாய் ஹோப், கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 69 பந்துகளில் 109* ரன்கள் குவித்து, ஒரே வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களை விளாசிய முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். நேப்பியரில் நடந்த இந்தப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 86/5 எனச் சரிந்து, கடும் நெருக்கடியில் இருந்தது. அந்தச் சமயத்தில் களமிறங்கிய சாய் ஹோப், நிலைமையை மாற்றும் விதமாகப் பயமில்லாத தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினார்.
முந்தைய சாதனை
அதிக சிக்சர் அடித்த முந்தைய சாதனை
32 வயதான அவர், வெறும் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் குவித்து, அணியை 247 என்ற போட்டிக்குரிய மொத்த ரன்களுக்கு உயர்த்த உதவினார். இந்த சதத்தின் போது அவர் அடித்த நான்கு சிக்ஸர்கள் மூலம், ஒரே ஆண்டில் 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்பு ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஜோஸ் பட்லர் தலா 41 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்தனர். விக்கெட் கீப்பர் ஜாம்பவான்களான எம்எஸ் தோனி, குமார் சங்கக்காரா அல்லது பிரண்டன் மெக்கல்லம் போன்ற ஜாம்பவான்கள் கூட இந்தச் சாதனையைச் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹோப்பின் அதிரடி சதம் இருந்தபோதிலும், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.