வரலாற்றுச் சாதனை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா புதிய உச்சம்
செய்தி முன்னோட்டம்
நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திச் சாதனை படைத்தார். 78 பந்துகளில் 87 ரன்களைக் குவித்து, இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்த ஆட்டத்தின் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை அவர் எட்டினார்.
சாதனை
முந்தைய சாதனை
இதற்கு முன், 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பூனம் ராவத் எடுத்த 86 ரன்களே இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஷஃபாலி வர்மா அந்தச் சாதனையை தற்போது முறியடித்துள்ளார். அதிக ரன்களை எடுக்கும் முயற்சியில் இருந்த அவர், அயபோங்கா காக்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். ஒருவேளை அவர் சதம் அடித்திருந்தால், ஆடவர் அல்லது மகளிர் பிரிவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருப்பார். ஷஃபாலியின் இந்த சிறப்பான இன்னிங்ஸ், முக்கியமான இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.