ஆசிய விளையாட்டுப் போட்டி: செபக்டக்ரா பிரிவில் முதல் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) செபக்டக்ரா ரெகு போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக அரையிறுதியில் தாய்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 10-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக்டக்ரா போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். ஆடவர் பிரிவை பொறுத்தவரை, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா செபக்டக்ரா போட்டியில் முதல்முறையாக வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
வாலிபாலும் கால்பந்தும் கலந்த கலவை செபக்டக்ரா
பெரும்பாலும் கிக் வாலிபால் என்று அறியப்படும் இந்த விளையாட்டு கால்பந்து, வாலிபால் மற்றும் தற்காப்புக் கலைகளின் கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு உற்சாகமான விளையாட்டு ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய இந்த தனித்துவமான விளையாட்டு பிரம்பு பந்து மற்றும் வலையுடன் விளையாடப்படுகிறது. தலா மூன்று வீரர்கள் கொண்ட இரண்டு அணிகள் மோதும் போட்டியாக இது நடத்தப்படுகிறது. மேலும், இந்த விளையாட்டுக்கு சுறுசுறுப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் குழுப்பணி ஆகியவற்றின் கலவை தேவைப்படுகிறது. மைதானத்தைப் பொறுத்தவரை, இது செவ்வக வடிவில் வாலிபால் நெட் மூலம் பிரிக்கப்பட்டிருக்கும். வடிவங்கள் பொதுவாக மாறுபட்டிருந்தாலும், ஒப்பீட்டளவில் பேட்மிண்டன் மைதானத்தின் அளவிலேயே இருக்கும்.