"சேவாக் எப்பவுமே வெளிப்படையானவர்" : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா
பேட்டிங் என்றாலும் சரி களத்திற்கு வெளியேயானாலும் சரி, வீரேந்திர சேவாக் தனக்கென ஒரு பாணியை கொண்டதோடு, மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஆவார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, 'டிஆர்எஸ் கிளிப்ஸ்' நிகழ்ச்சியில் ரன்வீர் அலகபாடியாவிடம் சேவாக் குறித்து பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை கூறியுள்ளார். சேவாக் தன்னிடம், போட்டியில் ரன் அடிக்காவிட்டால் சீக்கிரம் அணியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று அடிக்கடி கூறியதாக தெரிவித்துள்ளார் ஆகாஷ். 1999இல் அறிமுகமான சேவாக், 2001'இல் அப்போதைய கேப்டன் கங்குலி தலைமையில் தான் அதிக வாய்ப்புகளை பெற்றார். ஆனால் கங்குலியிடமே மோசமான ஃபார்மில் இருந்தபோது இதே கருத்தை தெரிவித்ததாக ஆகாஷ் கூறியுள்ளார்.
வீரேந்திர சேவாக் - ஆகாஷ் சோப்ரா நட்பு
2003 அக்டோபரில் நியூசிலாந்திற்கு எதிராக ஆகாஷ் சோப்ரா இந்தியாவில் அறிமுகமானபோது, சேவாக்குடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். சேவாக்கும் சோப்ராவும் பள்ளிப் பருவத்திலிருந்தே டெல்லிக்காக ஒன்றாக விளையாடியதால், இருவருக்கும் இடையில் ஏற்கனவே நல்ல அறிமுகம் இருந்தது. சேவாக்கை இளம் வயது முதலே அறிந்துள்ள சோப்ரா, சேவாக் எப்போதும் ஆமாம் சாமி போடும் நபராக இருந்ததில்லை என்றும், சச்சினை விட தன்னை சற்று கீழாக நடத்தியதால் பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட்டிடமே கூட எதிர்த்து பேசியுள்ளார் என்றும் கூறியுள்ளார். ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்காக 2003 முதல் 2004 வரை 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.