மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் மனம் உடைந்த சஞ்சு சாம்சன்? ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக புறக்கணிப்பிற்கு உள்ளதாக கூறப்படும் சஞ்சு சாம்சனுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடக்கும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ரோஹித் ஷர்மா இல்லாத சமயத்தில் இந்திய அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியாவுக்கும் முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் அணியை வழிநடத்தும் பொறுப்பு கேஎல் ராகுலுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் இதில் சேர்க்கப்பட்டனர்.
சஞ்சு சாம்சனின் சமூக வலைதள பதிவு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு எமோஜி பதிவை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், அணியின் தேர்வின்போது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது என பிசிசிஐ வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அதில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.