INDvsSA 2வது டி20: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதைச் செய்யும் முதல் வீரர் என்ற சாதனையை படைப்பாரா சஞ்சு சாம்சன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கியூபெர்ஹாவின் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் சதமடித்தால்,சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை பெறுவார். தற்போது, சஞ்சு சாம்சன் இரண்டு சதங்களை தொடர்ச்சியாக நடித்துள்ள நிலையில், இங்கிலாந்தின் பில் சால்ட், பிரான்சின் குஸ்டாவ் மெக்கியோன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் ஆகியோரும் இதேபோல் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் சாதனை படைக்கும் முனைப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரராக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். இவர் 86 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் அர்ஷ்தீப் சிங் 57 போட்டிகளில் 88 விக்கெட்டுகளுடனும், ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா 106 போட்டிகளில் 87 விக்கெட்டுகளுடனும் உள்ளனர். இருவரும், தற்போதைய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா 70 போட்டிகளில் 89 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், அவர் தற்போதைய தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் புவனேஸ்வர் குமார் 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகளுடன் உள்ளார்.