
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்சியின் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) முல்லான்பூரில் நடைபெற்ற 18வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியைத் தோற்கடித்தது.
இந்த வெற்றி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் நிலையை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், சஞ்சு சாம்சனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மைல்கல்லாக அமைந்தது.
அதாவது, அவர் இந்த வெற்றியின் மூலம், ஜாம்பவான் ஷேன் வார்னேவை பின்னுக்குத் தள்ளி, ராஜஸ்தான் ராயல்ஸ் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக மாறியுள்ளார்.
ஷேன் வார்னே 55 போட்டிகளில் 31 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், சஞ்சு சாம்சன் தற்போது 62 போட்டிகளில் 32 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆர்ஆர் vs பிபிகேஎஸ்
ஆர்ஆர் vs பிபிகேஎஸ் ஹைலைட்ஸ்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 205 ரன்கள் குவித்தது. இது முல்லான்பூரில் இதுவரை பதிவு செய்யப்பட்ட ஸ்கோர்களில் மிகவும் அதிகபட்சமாகும்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். 206 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் தொடக்கத்திலிருந்தே தடுமாறியது.
மிடில் ஆர்டரில் நேஹல் வதேரா (62 ரன்கள்) மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் (30 ரன்கள்) இடையேயான 88 ரன்கள் கூட்டணி பஞ்சாபின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தது.
எனினும், இந்த ஜோடி வீழ்ந்த பிறகு பஞ்சாப் அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.