ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2023 : இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா மிர்சா
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, இரண்டாவது சுற்றுக்கு எளிதாக முன்னேறியுள்ளார். சானியா மிர்சா மற்றும் கஜகஸ்தானின் அன்னா டானிலினா ஜோடி, ஹங்கேரியின் டால்மா கால்ஃபி மற்றும் அமெரிக்கரான பெர்னார்டா பெரா ஜோடியை 1 மணி நேரம் 15 நிமிடம் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 25 நிமிடங்களுக்குள் முதல் செட்டை எளிதாக முடித்த சானியா ஜோடி, இரண்டாவது செட்டில் 4-1 என ஆரம்பத்தில் முன்னிலை வகித்தது. அதேசமயம் இரண்டாவது செட்டில் கால்ஃபி மற்றும் பெரா ஆகியோர் கடும் போட்டியைக் கொடுத்தாலும், சானியா ஜோடி கடுமையாக போராடி தனது வெற்றியை உறுதிசெய்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
சானியா மிர்ஸா ஓய்வு
36 வயதான சானியா 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுகிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா ஆஸ்திரேலிய ஓபன் தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாக இருக்கும் என்றும், பிப்ரவரியில் துபாயில் நடக்கவிருக்கும் டபிள்யுடிஏ 1000 நிகழ்வுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில், சானியா ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதில் மூன்று இரட்டையர் பிரிவிலும், மூன்று கலப்பு இரட்டையர் பிரிவிலும் பெற்றுள்ளார்.